அன்பானவர்களே, இன்றைக்கு, "உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக" (சங்கீதம் 122:7) என்ற ஆசீர்வாதமான வாக்குத்தத்த வசனம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதத்தில் தாவீது, தேவனுடைய நகரமாகிய எருசலேமை நேசிக்கிறவர்களை, அதை நோக்கி யாத்திரை செய்கிறவர்களை, அதற்காக ஜெபிக்கும்படி உற்சாகப்படுத்துகிறான். நாம் ஏன் எருசலேமுக்காக ஜெபிக்கவேண்டும்? எருசலேம் பட்டணம் தேவனுக்குப் பிரியமானது என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 62:4). தேவன் அதை 'நான் உன்மேல் பிரியமாயிருக்கிறேன்' என்று அர்த்தப்படும்படி எப்சிபா என்று அழைக்கிறார். எருசலேம், இயேசுவின் பிறப்பினுடன் தொடர்புடையதும், அவர் ஊழியம் செய்ததும், சிலுவையிலறையப்பட்டதும், மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்ததுமான பட்டணமாயிருக்கிறது. இயேசு மீண்டும் வரும்போது, அங்கேதான் வருவார் என்பதால் அது உலகத்தால் கவனிக்கப்படும் இடமாக இருக்கிறது. ஆகவேதான் நாம் எருசலேமுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இஸ்ரேல் தேசமும் பாலஸ்தீனமும் எருசலேமை தங்கள் தலைநகரம் என்று உரிமை பாராட்டுகின்றன. ஆகவேதான் இஸ்ரேல் - பாலஸ்தீன சர்ச்சைக்கு காரணமான இடமாக அது கூறப்படுகிறது. எருசலேம் 52 முறை தாக்கப்பட்டுள்ளது; இரண்டு முறை அழிக்கப்பட்டுள்ளது. அங்கே நிலவும் எல்லா சர்ச்சையும் முற்றுப்பெற்று எருசலேமிலுள்ள மக்கள் சமாதானத்துடன் வாழ்வதற்காக நாம் ஜெபிக்கவேண்டும். சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் பெயரால் நாம் ஜெபிக்கவேண்டும். "உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக" (சங்கீதம் 122:6) என்று வேதம் கூறுகிறது. நாம் எருசலேமை நேசித்து, அதன் சமாதானத்திற்காக ஜெபிக்கும்போது, ஆண்டவர் நம்மை செழிக்கப்பண்ணுகிறார். இஸ்ரேலில் மக்கள் 'ஷாலோம்' என்று சொல்லி ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்வார்கள். அதற்கு சமாதானம் என்றே பொருள். இயேசு அற்புதங்களைச் செய்த பிறகு அநேகவேளைகளில், 'சமாதானத்தோடே போ' என்று கூறுகிறார். ஒருமுறை 12 ஆண்டுகள் பெரும்பாடினால் கஷ்டப்பட்ட ஒரு பெண், இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவளுடைய விசுவாசத்தினால் அவள் குணம் பெற்றாள். ஆகவேதான் இயேசு, " மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு" (மாற்கு 5:34) என்று கூறினார். இயேசு தம் சீஷர்களிடம், "ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்" என்று கூறினார். எருசலேமின் மக்கள் சமாதானத்திற்காக ஏங்குகிறார்கள்; ஆகவே நாம் எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்கவேண்டும். தேவனுடைய பட்டணமாகிய எருசலேமில் நமக்கு இஸ்ரேல் ஜெப கோபுரம் இருப்பதால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இஸ்ரேல் ஜெப கோபுரத்தில் நம் ஜெப வீரர்கள், தினமும் 24 மணி நேரமும், பட்டணத்தை பார்த்தவண்ணம், எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்கிறார்கள். அவர்கள் ஜெபிப்பதுடன், தீர்க்கதரிசனமும் உரைக்கிறார்கள். அதனால்தான் ஆண்டவர், இயேசு அழைக்கிறார் ஊழியத்தை ஆசீர்வதித்து வருகிறார். ஆண்டவர் உங்களையும் வர்த்திக்கப்பண்ணுவாராக; சமாதானம் தந்தருளுவாராக. உங்கள் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உங்கள் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் வாழ்வில் சமாதானமும் செழிப்பும் விளங்கும் என்று வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட, உமக்குப் பிரியமான எருசலேம் பட்டணத்திற்காக ஜெபிக்கிறேன். உம்முடைய சமாதானம் அதன் தெருக்களில் புரண்டு, ஒவ்வொரு வீட்டையும் நிரப்புவதாக. வேதனை இருக்கும் இடத்தில் சுகத்தையும், பிரிவினை இருக்கும் இடத்தில் ஒற்றுமையையும் கொடுப்பீராக. முரண்பாடுகள் அகன்று, சமாதானம் துளிர்க்கும்படி செய்யும். சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் பிரசன்னம் அந்தப் பட்டணத்தை மூடுவதாக. உம்முடைய வசனம் கூறுகிறபடி, எருசலேமை நேசிக்கிறவர்களும், அதன் சமாதானத்தை நாடுகிறவர்களும் சுகித்திருப்பார்களாக. எங்கள் இருதயம் விசுவாசத்தில் உம்மிடமாய் திரும்பி, பாடுகளிலிருந்து விடுதலையை காணட்டும். என் இருதயத்திலும் வீட்டிலும் உம்முடைய இணையற்ற சமாதானமும் பரிபூரண செழிப்பும் விளங்கும்படி பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.