அன்பானவர்களே, இன்றைக்கு, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்" (எபேசியர் 2:10) என்ற அழகான வசனத்தை தியானிக்கிறோம். ஒரு மொழிபெயர்ப்பில், 'நாம் தேவனுடைய மிகச்சிறந்த படைப்பாக இருக்கிறோம்' என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மிகுந்த கவனத்துடன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார். இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு, நாம் தேவனுடைய கவிதையாயிருக்கிறோம் என்று பொருளாகும். ஒரு கவிதையை எழுத எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அதை செம்மையாக்க, ஒவ்வொரு வார்த்தையும் சரியாக அமைய எவ்வளவு நேரம் எடுக்கும்! அதை பாதியில் விட்டுவிடமாட்டோமல்லவா? ஆம், நாம் தேவனுடைய கரங்களால் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட அவருடைய அன்பின், இரக்கத்தின் புஸ்தகமாக இருக்கிறோம். தேவனே நம் வாழ்க்கையை எழுதுகிறவராயிருக்கிறார்; வேறு யாரும் அதைச் செய்வதற்கு அவர் அனுமதிக்கமாட்டார்.

என் தாயார், தன்னுடைய இளவயதில் கூடைகளை முடைவார்கள். அவர்கள் வேலையை மிகவும் சரியாக செய்வார்கள். தன்னுடைய வேலையை வேறு யாரும் செய்ய விடமாட்டார்கள். "இதை நான் மட்டுமே செய்யவேண்டும்," என்று கூறுவார்கள். ஒவ்வொரு கூடையையும் மிகுந்த பிரியத்துடனும் கவனத்துடன், எல்லாம் மிகச்சரியாக இருக்கும்வகையில் முடைவார்கள். அவர்கள் முடைந்த கூடைகள், நாங்கள் பிரயாணம் செய்யும்போது கொண்டு செல்வதற்காக செய்த பெரிய அழகான பை எங்களிடம் இருக்கின்றன. வேலையில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கும் பிரியத்துக்கும் சாட்சியாக அவை மிகச்சிறந்த தயாரிப்புகளாக இருக்கின்றன. அவ்வாறே, நீங்கள் தேவனுடைய மிகச்சிறந்த படைப்பாக இருக்கிறீர்கள். தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும், அவர் மாத்திரமே உங்களை வனைகிறார். தம்முடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள், ஆவியானவர், அன்பு, பல்வேறு அருட்கொடைகள் ஆகியவற்றைக்கொண்டு அவர் உங்களை சுத்திகரித்து, நீங்கள் இருக்கவேண்டியவண்ணமாக வனைந்திருக்கிறார்.

இன்றும் அவர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் உங்களை நாட்டியிருக்கிறார். ஆகவேதான் வேதம் நம்மை தேவன் நாட்டிய 'நீதியின் விருட்சங்கள்' என்று அழைக்கிறது. உங்கள் வாழ்க்கை இலக்கற்றது அல்ல. தேவனை மகிமைப்படுத்தும்படி நற்கிரியைகளைச் செய்வதே உங்களுடைய பணியாகும். "ஆண்டவரே, நான் உமக்காக வேலை செய்ய முடியுமா?" என்று நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்கலாம். நீங்கள் உங்கள் இருதயத்தை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, அவர் உங்களுக்கு வாசல்களை திறப்பார். அவற்றின் வழியாக கடந்துசெல்ல தயங்காதிருங்கள். நீங்கள் உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்து, அவரை பின்பற்றும்போது, பரிசுத்த ஆவியினால் ஏவப்படும் நற்கிரியைகளை செய்யும்போது, "பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்" (மத்தேயு 25:35) என்று இயேசு கூறுகிறபடி, அவர் உங்கள்மேல் பிரியமாயிருப்பார்.

இவ்வாறே, நீங்களும் அவருக்கு ஊழியம் செய்யும்படி உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, அவர் உங்கள்பேரில் மகிழுவார். நீங்கள் நற்கிரியை செய்யும்படி கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய கையின் கிரியையாயிருக்கிறீர்கள். ஆகவே, அமைதியாயிராதிருங்கள். எழும்புங்கள்! முழு இருதயத்துடனும் ஆண்டவருக்கு ஊழியம்செய்யுங்கள். உங்கள் முழு பெலனோடும் அவரை நேசித்திடுங்கள்; அப்போது அவருடைய ராஜ்ஜியத்தில் நீங்கள் நீதியின் விருட்சமாகவும், கனிதரும் செடியாகவும் விளங்குவீர்கள். திருமணத்திற்கு முன்பு நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவில்லை. ஆனால், நான் அவருடைய ஊழியத்திற்கு என் உள்ளத்தை அர்ப்பணித்தபோது, அவர் பல லட்சம் ஜனங்களுக்கு நான் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்தார். எனக்கான பலன் அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் ஆண்டவருக்காக வேலை செய்தால், நிச்சயமாகவே பலனை பெறுவீர்கள். அவருக்கு ஊழியம் செய்வதற்கு முன் வருவீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய மிகச்சிறந்த படைப்பாக என்னை சிருஷ்டிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய அன்பினிமித்தம் என்னை வனைந்தீர்; என் வாழ்க்கை உம் கரங்களில் உள்ளது. ஆண்டவரே, உம்முடைய பரிபூரண திட்டத்தின்படியும், நோக்கத்தின்படியும் என்னை வனைந்திடும். உம்முடைய ஆவியினால் என்னை நிறைத்து, நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற நற்கிரியைகளை செய்யும்படி வழிநடத்தும். நான் மிகுந்த கனிகளைக் கொடுக்க உதவும்; உம்முடைய நாமத்திற்கு மகிமையை சேர்த்துக்கொள்ளும். நீர் எனக்கென்று திறக்கும் வாசல்கள் வழியாக கடந்துசெல்ல தேவையான தைரியத்தை தந்திடும். தேவையோடு உள்ள மக்கள்மேலான அன்பும் மனதுருக்கமும் என் உள்ளத்தை நிரப்பட்டும். மற்றவர்களுக்கு ஊழியம் செய்து, அவர்கள் ஆசீர்வாதம் பெறும்படியான பாத்திரமாக என்னை பயன்படுத்தியருளும். எனக்கு பரலோகத்தில் நிச்சயமாகவே பலன் உண்டு என்பதை அறிந்து, எப்போதும் உமக்கு உண்மையாக இருப்பதற்கு எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.