அன்பானவர்களே, இன்றைக்கு தேவன், "கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்" (ஏசாயா 60:19) என்ற அருமையான வாக்குத்தத்த வசனத்தை உங்களுக்கு தந்திருக்கிறார். உங்கள் வாழ்வில் சூரியவெளிச்சம் பிரகாசிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதை நான் அறிந்திருக்கிறேன். தேவனும் அவ்வாறே விரும்புகிறார். அவரே உங்களுக்கு வெளிச்சமாக இருக்க விரும்புகிறார். ஒருமுறை, எங்கள் இளைய மகள் ஸ்டெல்லா ரமோலாவுக்கு ஒரு டி-ஷர்ட் வாங்கியது நினைவுக்கு வருகிறது. அதில், "நீரே எனக்கு வெளிச்சமாயிருக்கிறீர்," என்ற வாசகம் இருந்தது. நான் அதைப் பார்க்கும்போதெல்லாம், "ஆண்டவரே, என் மகள் ஒளிவீசுகிறவளாய் இருக்கட்டும்," என்று ஜெபிப்பேன். தேவனின் இருதயமும் இதையே விரும்புகிறது. ஆகவேதான் அவர், "நானே உனக்கு நித்திய வெளிச்சமும், உனக்கு மகிமையுமாயிருப்பேன்" என்று வாக்குப்பண்ணுகிறார்.

உலகில் அநேகர் தேவனை அலட்சியப்படுத்திவிட்டு, தவறான இடங்களில் ஒளியை தேடுவது வருத்தத்திற்குரிய விஷயம். "கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்" (சங்கீதம் 89:15) என்று வேதம் கூறுகிறது. மெய்யாகவே நாம் தேவனுடைய வெளிச்சத்தில் நடக்கும்போது, மிகுதியான ஆசீர்வாதங்களைப் பெறுவோம். நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய கெம்பீர சத்தத்தைக் கேட்போம்.

தேவனுடைய வசனம் நம்முடைய கால்களுக்குத் தீபமும் நம்முடைய பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. ஆகவேதான், "கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்" (எபேசியர் 5:11,8) என்று நினைவுறுத்துகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உலகத்தின் மெய்யான ஒளியாயிருக்கிறார். தேவன் ஒளியாயிருப்பதினாலும், அவரில் எவ்வளவேனும் இருள் இல்லை என்பதாலும் ஜீவனை தரும் அவருடைய ஒளியைப் பெற்றுக்கொண்ட யாரும் மறுபடியும் இருளில் நடக்கமாட்டார்கள். நம்முடைய கண்களை இயேசுவின்மேல் வைக்கும்போது, நம்முடைய முகங்கள் அவருடைய மகிமையால் பிரகாசிக்கும். இந்த இருண்ட உலகில் நாம் பிரகாசிக்கும்படி அவர் நம்மை பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார். வேதம் கூறுகிறபடி நாம் மகிமையின்மேல் மகிமையடைந்து அவருடைய சாயலாக மாறுகிறோம் (2 கொரிந்தியர் 3:18). இருண்ட இவ்வுலகில் பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் நம்மால் வெற்றிகரமாக வாழ இயலாது.
ஆம், இயேசுவே நம் மகிமையாயிருக்கிறார். அவர் நமக்கு கனத்தை தந்து, "எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது" (ஏசாயா 60:1) என்று வேதம் கூறுகிறவண்ணம், நம் வாழ்க்கையை பிரகாசிக்கப்பண்ணுகிறார். "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" என்று விசுவாசத்தோடு அறிக்கை பண்ணுங்கள். அன்பானவரே, இதுவே உங்கள் சாட்சியாக இருக்கட்டும். கர்த்தர்தாமே உங்களுக்கு நித்திய வெளிச்சமும் மகிமையுமாயிருப்பாராக. இவ்வுலகில் தேவனின் உதயமாக நீங்கள் ஒளிவீசுவீர்களாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நீரே உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர். இப்போதே என்மீது நீர் பிரகாசிக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம்முடைய மகிமையான ஒளியைக் காணும்படி என் கண்களைத் திறந்து, என் இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பும். ஆண்டவரே, என்னை பிரகாசிப்பியும். வாழ்வின் எப்பக்கத்திலும் நான் ஒளிவீசும்படி செய்யும். உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என் வாழ்விலிருந்து எல்லா இருளையும் அகற்றும்; உம்முடைய மகிமை என்னை நிரப்பட்டும். இன்றிலிருந்து உம்முடைய நித்திய வெளிச்சம் என்மேல் தங்கி, எனக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அளிக்கட்டும். ஆண்டவரே, என்னை உம்முடைய மகிமையால் நிரப்பும்;அனுதினமும் என் வாழ்வு அதிகமதிகமாக பிரகாசமடையட்டும். என்னை உம்முடைய சாயலுக்கு மறுரூபமாக்கும்; உம்முடைய அன்பையும் கிருபையையும் நானும் காண்பிக்க உதவி செய்யும். நீரே என் இரட்சிப்பாக இருப்பதால், மனகிலேசம் அல்லது பயம் இவற்றின் நிழல் கூட என்மீது விழாதிருக்கட்டும், ஆமென்.