அன்பானவர்களே, "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?" (சங்கீதம் 118:6) என்று வேதம் கூறுகிறது. இன்றைக்கு ஆண்டவர் ஆறுதலான இந்த வார்த்தையை உங்களுக்குத் தருகிறார். தாவீது, "கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்," என்று கூறுகிறான். "மனுஷரை என் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தேன்" என்றும் அவன் கூறுகிறான்.
ஆம், அன்பானவர்களே, நம் வாழ்வின்மீது மற்றவர்கள் ஏறி மிதித்துச் செல்வதற்கு தேவன் சில நேரங்களில் அனுமதிக்கிறார். மனுஷர்கள், பொய்ச்சாட்சிகளை கூறலாம்; பொய்களை பரப்பலாம்; தவறாய் நம்மை குற்றஞ்சாட்டலாம்; அநியாயமாய் அப்படிச் செய்யலாம். அதைப் பார்த்து, நாம் உள்ளத்துக்குள், "ஆண்டவரே, நீர் எங்கே இருக்கிறீர்? உம்முடைய நியாயம் எங்கே?" என்று கதறக்கூடும். சிலருக்கு குழந்தை இல்லாததினால் அழுவார்கள். வேலையை இழக்க நேரிட்டவர்கள், "ஏன் இந்த அவமானத்தின் வழியாக கடந்து செல்ல அனுமதித்தீர்?" என்று புலம்புவார்கள். உலகம் பொல்லாங்கினால் நிறைந்திருக்கிறது. சில சமயங்களில் இந்தப் பொல்லாத மனுஷர்கள் நம் வாழ்வின்மேல் ஏறிப்போவதற்கு தேவன் அனுமதிக்கிறார். இந்த தருணங்களில்தான் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுவார். அவர், "பொல்லாதவர்களே, நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகள்மேல் ஏறிச்செல்லுங்கள். தவறாய் அவர்களை குற்றஞ்சாட்டுங்கள்; அவர்களைப் பற்றி தவறாய்ப் பேசுங்கள்; உங்கள் அதிகாரத்தினால் அவர்களை பயமுறுத்துங்கள். ஆனாலும், நான் அவர்களுக்கு நியாயஞ்செய்து உங்கள் அனைவருக்கும் மேலாக அவர்களை உயர்த்துவேன். என்னுடைய வேளையிலே நான் வந்து, அவர்களை எழுப்புவேன்," என்று உரைக்கிறார்.
ஆம், கர்த்தர், "நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை" என்று கூறுகிறார் (யோவேல் 2:25,26). இதுவே தேவன் உங்களுக்கு தரும் வாக்குத்தத்தமாகும்.
பயப்படாதிருங்கள். மனுஷனால் என்ன செய்ய முடியும்? இயேசு, இதே வேதனையை சிலுவையில் சகித்தார். அவர் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அடிக்கப்பட்டார்; அவர்மேல் உமிழ்ந்தார்கள். அவர் பாவமே செய்யாதபோதும் சிலுவையில் அறையப்படும்படி தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஜனங்கள் அவரைப் பின்பற்றியதால், அதிகாரத்தில் இருந்தவர்கள் பொறாமை கொண்டார்கள். அவர் ஜனங்களுக்கு ஜீவனை அளித்தார். மரித்த அவர், உங்களுக்கு உதவி செய்யும்படியாகவே மூன்றாம் நாளில் மறுபடியும் எழுந்துள்ளார். அவர் நியாயம் செய்வார். இருதயத்தில் அல்லது வாழ்க்கையில் புண்பட்டிருக்கிறீர்களா? ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்; பயப்படாதிருங்கள். அவர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக ஒரு பந்தியை ஆயத்தம்பண்ணி, உங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுவார்; உங்களை உயரமாய் உயர்த்துவார். உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். உங்கள் எதிரிகள் தொடுக்கும் தாக்குதல்கள் கொஞ்சகாலமே நீடிக்கும்.
கொல்கத்தாவை சேர்ந்த ஆஸ்டமி பாரி என்ற சகோதரி 19 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்கள். அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். விதவை தாயார் மட்டும் இந்த சகோதரியுடன் இருந்தார்கள். அவர்கள் இயேசுவை அறியாதவர்கள். குடும்பத்தினர் அவர்களுக்கு அதிக உபத்திரவம் கொடுத்தார்கள். தன்னை கொடுமைப்படுத்துவதாக அவர்களுடைய சகோதரரின் மனைவி பொய் வழக்கு பதிவு செய்தார்கள். படிப்பறிவு இல்லாத காரணத்தினால், இதை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. கொல்கத்தாவிலுள்ள ஜெப கோபுரத்திற்கு ஒருவர் அவர்களை அழைத்து வந்தார்கள். ஜெப வீரர்கள், அந்த சகோதரியுடன் இணைந்து அவர்களுக்காக ஜெபித்தனர். அவர்கள் ஜெப கோபுரத்திலிருந்து வெளியே வந்ததும், அவர்களுடைய வழக்குரைஞர் தொடர்பு கொண்டு, "உங்கள் சகோதரரின் மனைவி பதிவு செய்த பொய் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்," என்று தெரிவித்தார்.
அன்பானவர்களே, தேவன் உங்களுக்கும் நியாயம் செய்வார். உங்கள் வேலையில் அவர் உங்களை உயர்த்துவார்; உங்கள் குடும்பத்தை பாதுகாப்பார்; உங்களை செழிக்கப்பண்ணுவார். நியாயத்திலே நல்ல பலன் கிடைக்கும்படி செய்வார்; நீங்கள் அனுபவித்த வேதனைகள், இழப்புகள் எல்லாவற்றுக்கும் இரட்டிப்பான பலனை தருவார்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீர் எப்போதும் என் பட்சத்தில் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்குக் கேடகமாகவும் என்னை பாதுகாக்கிறவராகவும் இருக்கிறபடியினால் நான் பயப்படேன். பொல்லாதவர்கள் எனக்கு விரோதமாய் எழும்பும்போது, எனக்கு தீங்கு செய்ய முயற்சிக்கும்போது, நீர் எல்லா இக்கட்டுகளுக்கும் மேலாக என்னை உயர்த்தி, உம்முடைய வல்லமையை வெளிப்படுத்தி, ஏற்ற நேரத்தில் நியாயம் செய்வீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, சத்துருவினால் திருடப்பட்ட வருஷங்களை திரும்ப தந்தருளும்; நான் கையிட்டுச் செய்யும் வேலைகளை ஆசீர்வதித்தருளும். இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பியதுபோல, உபத்திரவங்களிலிருந்து என்னை தூக்கியெடுத்து, பூரணமாக ஆசீர்வதித்தருளும். என் சத்துருக்களுக்கு முன்பாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணும். என் வாழ்நாளெல்லாம் உம்முடைய நன்மையும் கிருபையும் என்னை தொடரும்படி செய்யும். என்மீது தொடுக்கப்படும் எல்லா தாக்குதல்களும் கொஞ்சகாலமே நீடிக்கும்; உம்முடைய நியாயமே நிலைநிற்கும் என்று அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.