எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்" (சங்கீதம் 37:18) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும்.

கர்த்தருடன் நெருங்கி ஜீவித்த அநேக நீதிமான்களைக் குறித்து நாம் வேதத்தில் வாசிக்கிறோம். யோபு அவர்களுள் ஒருவன். யோபு, நீதிமானும் உத்தமனுமாயிருந்தான் என்று கர்த்தரே அவனைக் குறித்து சாத்தானிடம் சாட்சி கொடுத்தார் (யோபு 1:1,8). ஆனாலும், அப்படிப்பட்டவர்களும் உபத்திரவத்தின் வழியாக செல்லவேண்டியதிருந்தது. வேதம் கூறுவதுபோல, உத்தமனான யோபு, அநேக உபத்திரவங்களையும் சோதனைகளையும் வாழ்வில் சந்தித்தான் (சங்கீதம் 15:2). தொடக்கத்தில் அவன் தன் பிள்ளைகள் அனைவரையும் இழந்தான். "உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது" (யோபு 30:16) என்று அவன் கூறுகிறான். தான் நெருக்கப்பட்டபோதும், "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்" (யோபு 13:15) என்றும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்றும் அவன் அறிக்கை செய்தான்.
அன்பானவர்களே, யோபு தன்னுடைய உபத்திரவங்கள் எல்லாவற்றின் மத்தியிலும் கர்த்தரை நோக்கிப் பார்த்தான்; எப்போதும் அவரையே பற்றிக்கொண்டான். "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" (யோபு 42:2) என்று அவன் கூறினான். ஆம், அன்பானவர்களே, யோபுவைப் போல நாமும் ஆண்டவருடன் நெருங்கிய ஐக்கியம் பாராட்டவேண்டும். அப்போது தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி நம்முடைய சுதந்தரம் எந்நாளும் நிலைத்திருக்கும்.

ஜெபம்:
பரம தகப்பனே, உம்முடைய பிரசன்னமும் வழிகாட்டுதலும் எப்போதும் என்னோடிருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். உத்தமர்களின் நாட்களை நீர் அறிந்திருப்பதுபோலவும், அவர்கள் சுதந்தரம் என்றைக்கும் இருக்கும் என்று வாக்குக்கொடுத்திருப்பதுபோலவும், உம்முடைய தெய்வீக ஞானமும் கரிசனையும் என்மேல் இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, நான் உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும், யோபுவைப் போல நீதியான, உத்தமமான வாழ்க்கை வாழவும் முயற்சிக்கிறேன். உபத்திரவங்களும் சோதனைகளும் எதிர்ப்படும்போது, யோபுவின் உறுதியான விசுவாசத்தை நான் நினைவுகூர உதவி செய்யும். சோதனைகளிலிருந்து நான் சுத்தபொன்னாக வெளிப்படும்படி என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தியருளும். நெருக்கப்படுகிற காலங்களில் நான் உம்மையே எப்போதும் நோக்கிப் பார்க்கவும், உம்முடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்ளவும் உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீர் நினைத்தது ஒருபோதும் தடைபடாது என்று அறிந்து, உம்முடைய வல்லமையையும் கர்த்தத்துவத்தையும் அறிக்கையிடுகிறேன். நீர் கொடுத்துள்ள வாக்குத்தத்தத்தின்படி என்னுடைய சுதந்தரம் என்றென்றைக்கும் நிலைக்கும் என்று நம்பவும், உம்மோடு நெருங்கிய ஐக்கியம்கொண்டிருக்கவும் எனக்கு உதவும். ஆண்டவரே, உம்முடைய சித்தம் என் வாழ்வில் செய்யப்படும்படி எனக்கு வழிகாட்டவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.