எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4) என்ற அருமையான வசனத்தை தியானிப்போம். நம் தேவன் மெய்யாகவே பெரியவராயிருக்கிறார். நீங்கள் உபத்திரவங்களை சந்திக்க நேரும்போது, உலகத்தையோ, உலக பிரகாரமான நண்பர்களை அல்லது தகப்பனையோ, தாயையோ கூட தேடாதிருங்கள். மாறாக, தேவனாகிய கர்த்தரை நோக்கிப் பாருங்கள். "உங்கள் தேவன் பெரியவராயிருக்கிறார்," என்றே நான் அடிக்கடி செய்திகளில் கூறுவேன். அதை மறந்துபோகாதிருங்கள். அவரால் உங்களுக்கு அற்புதங்களைச் செய்ய முடியும்; அவர் அதிசயங்களைச் செய்கிற தேவனாயிருக்கிறார். அவருடைய நாமம், அதிசயமானவர். அல்லேலூயா! அன்பானவர்களே, உங்கள் தேவன் எவ்வளவு பெரியவராயிருக்கிறார்! "கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்" (சங்கீதம் 96:4) என்றும், "நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்" (சங்கீதம் 147:5; 104:1) என்றும் வேதம் கூறுகிறது.

தாவீதுக்கு பல இக்கட்டுகள் வந்தன. ஆனாலும், தேவ மனுஷனாகிய அவன் எப்போதும் கர்த்தரை நோக்கி, "நீரே என் நம்பிக்கை; நீரே என் சந்தோஷம்; நீரே என் பெலன்," என்று கூறினான். "நீரே எனக்கு எல்லாமுமாக இருக்கிறீர்," என்று மறுபடியும் மறுபடியும் கூறுகிறான். எனக்கு அருமையான தேவ பிள்ளையே, "ஆண்டவர் மாத்திரமே என் நம்பிக்கை. நான் எப்போதும் அவரை நோக்குவேன்," என்று அறிக்கை செய்யுங்கள். அப்படி அறிக்கையிடும்போது, உங்கள் வாழ்விலும் ஆண்டவர் பெரியவராக விளங்குவார். "கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும்... அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது" (சங்கீதம் 111:2,3) என்று வேதத்தில் வாசிக்கிறோம். தேவன், பெரிய காரியங்களைச் செய்வார் என்று தாவீது முழுவதுமாக அவரை நம்பினான். அவ்வாறே நீங்களும் உபத்திரவத்தின் மத்தியில், தேவைகளின் நடுவில் இருக்கும்போது, எந்த மனுஷனையோ, மனுஷியையோ உதவிக்கு தேடாமல், தேவனாகிய கர்த்தரையே நோக்கிப் பாருங்கள். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; உங்கள் தேவைகளை அவரிடம் கூறுங்கள்; உங்கள் கூப்பிடுதலை அவர் கேட்கிறார் என்று விசுவாசியுங்கள். இப்போதே அவர் உங்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்வார். இதை நீங்கள் விசுவாசியுங்கள். எல்லா பிரச்னைகளிலிருந்தும் உங்களை விடுவிக்க ஆண்டவரால் முடியும். உங்கள் உபத்திரவங்களையெல்லாம் அவர்மேல் வைத்துவிட்டு, தாவீதைப் போல அவரை நம்புங்கள். ஆண்டவர், இப்போதே உங்கள் வாழ்வில் பலத்த காரியங்களை செய்வார். நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காண்பீர்கள். தேவனுடைய மகத்துவம் மாறாததாயிருக்கிறது; இன்று அவரிடமிருந்து உச்சிதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். அல்லேலூயா!  

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பெரியவரும் வல்லமையுள்ளவருமான என் இரட்சகரே, நீர் எல்லோரிலும் பெரியவராயிருக்கிறீர். நீர் மாத்திரமே என் நம்பிக்கையும் பெலனுமாயிருக்கிறீர். என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மட்டுமே என் அடைக்கலமும், என் சந்தோஷமும், என் சமாதானமுமாயிருக்கிறீர்; உபத்திரவ காலத்தில் நான் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் அற்புதங்களை செய்யும்படி ஜெபிக்கிறேன்; உம்முடைய அதிசயங்களை நான் காணும்படி செய்யும். உம்முடைய அநாதி வல்லமையை விசுவாசித்து என் தேவைகளை உம்முன்னே வைக்கிறேன். நீரே சகல ஆசீர்வாதங்களின் ஊற்றாயிருக்கிறீர்; எனக்கு அற்புதங்களைச் செய்கிற தேவன் நீரே. உம்மை விசுவாசிக்கிற என் மீது உம்முடைய மகிமையை பிரகாசிக்கப்பண்ணும். என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் கூப்பிடுதலுக்குச் செவிகொடும். உம்முடைய மகத்துவத்தையும் வல்லமையையும் நம்பி, இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.