அன்பானவர்களே, "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்" (அப்போஸ்தலர் 10:35) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தின்படி, ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து, தமக்கு உகந்த சுகந்தவாசனையாக ஏற்றுக்கொள்வாராக. கர்த்தருக்குப் பயப்படுதல் தேவனுக்கு முன்பாக சுகந்தவாசனையாக இருக்கிறது. அது அவருக்கு பிரியமான காணிக்கையாகும். கொர்நேலியு தேவனுக்குப் பயப்படுகிறவனும் நீதியானவற்றை செய்கிறவனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது (அப்போஸ்தலர் 10:2). அவன் எப்போதும் தேவனை நோக்கி ஜெபிக்கிறவனும், ஏழைகளுக்குக் கொடுக்கிறவனுமான தேவபக்தியுள்ள மனுஷனாயிருந்தான். இயேசுவை விசுவாசிப்பதற்கு கொர்நேலியு, யூதன் அல்ல. அவன் ரோம நூற்றுக்கு அதிபதியாக இருந்தான். ஆகவே, அவன் தேவன்மேல் விசுவாசம் வைப்பது சாதாரண காரியமல்ல. ஆனாலும் கொர்நேலியு தமக்குப் பயந்தவனாயிருந்ததினாலும் நீதியை செய்ததினாலும் தேவன் அவனை தமக்கு உகந்தவனாக கண்டார். தேவன், நபர்களை கனம்பண்ணுகிறவரல்லர். அவர் பட்சபாதம் காட்டுவதில்லை. நீங்கள் யாராக இருந்தாலும் தேவனை விசுவாசித்து, அவர்மேல் பயபக்தியாயிருக்கலாம். நீங்கள் எந்தப் பின்னணி கொண்டவராக இருந்தாலும் இயேசுவை விசுவாசிக்கலாம்.

"ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது" (ரோமர் 4:3) என்று வேதம் கூறுகிறது. நாம் தேவன்மேல் விசுவாசம் வைக்கும்போது, நீதிமானாகிறோம் என்று ஆண்டவர் நம்மிடம் கூறுகிறார். நம்முடைய சுயநீதியானது அழுக்கான கந்தை என்று கூறப்பட்டுள்ளது (ஏசாயா 64:6). ஆனாலும் தேவனுக்கு சுகந்தவாசனையான இயேசுவின் தியாகத்தின் மூலம் நம்முடைய அழுக்கான கந்தை நீதியாக மாற்றப்பட்டுள்ளது. இயேசுவின் நீதியின் காரணமாக, நாம் தேவனுக்கு உகந்தவர்களாக இருக்கிறோம். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரிந்தியர் 2:14) என்று வேதம் கூறுகிறது. அடுத்த வசனத்தில் ஆண்டவர் நம்மை 'நற்கந்தம்' என்று அழைக்கிறார்.  தேவனாகிய கர்த்தருக்கு உகந்தவர்களாக இருப்பது எவ்வளவு இனிமையானது. நாம் தேவனை நம்பும்போது மாத்திரமே இவ்வாறு நடக்கிறது.

இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழாக்களின்போது, ஜனங்கள் எளிமையான விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் அற்புதத்தை நாடி வருகிறார்கள். பெருங்கூட்டம் இருந்தாலும், தேவன் மாத்திரமே தங்களுக்கு இருக்கிறார் என்று விசுவாசத்தோடு பற்றிக்கொள்கிறார்கள். இந்த அசையாத விசுவாசமும் நம்பிக்கையும் நீதியாக காணப்படுகிறது; இதன் பலனாக தேவன் அவர்களை உகந்தவர்களாக ஏற்றுக்கொண்டு அற்புதங்களைச் செய்கிறார்.
ஜனங்கள் சக்கர நாற்காலிகளிலிருந்து எழுப்பப்படுகின்றனர்; சங்கிலிகள் உடைக்கப்படுகின்றன; பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகின்றனர். மைதானத்தில், நாங்கள் தேவனுடைய சுகந்த வாசனையை முகர்கிறோம். அன்பானவர்களே, நீங்களும் தேவனுக்கு உகந்தவராயிருக்கிறீர்கள். நீங்கள் அவர்மேல் வைக்கிற விசுவாசமே உங்களுக்கு அற்புதம் நடக்கும் என்பதற்கு உத்தரவாதமாயிருக்கிறது.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் கொடுத்துள்ள உண்மையுள்ள வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். விசுவாசமில்லாமல் உமக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்று உம்முடைய வசனம் கூறுவதால், உம்மை முற்றிலுமாக நம்பி உம் முன்னே வருகிறேன். என் வாழ்க்கை உமக்கு உகந்த சுகந்த வாசனையாக மாறும்படி தேவனுக்கு பயப்படும் பயம் எனக்குள் நாளுக்குநாள் வளரட்டும். அர்ப்பணிப்பும் நீதியுமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு எனக்கு உதவும்; எப்போதும் ஜெபிப்பதற்கான கிருபையை எனக்கு அருளிச்செய்யும். ஆண்டவரே, சிலுவையில் நீர் செய்த தியாகத்தினால் என்னுடைய நீதியானதற்காகவும், தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக என்னை நீதிமானாக்குவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் விசுவாசத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை திரும்பவும் எனக்கு தந்து, என் வாழ்வில் அற்புதங்களை செய்து, நான் செல்லுமிடமெங்கும் உம்முடைய நற்கந்தத்தை கொண்டு செல்லும் சுகந்த வாசனையாக என்னை நிலைப்படுத்துவீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.