அன்பானவர்களே, "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்" (யோவான் 14:16) என்று வேதம் கூறுவதை இன்றைக்கு தியானிப்போம். வேதம், 'வேறொரு தேற்றரவாளன்' என்று கூறுகிறது. அவர் தனியான தேவன் அல்ல. தேவனாகிய குமாரன், தேவனாகிய பிதா, தேவனாகிய பரிசுத்த ஆவி அனைவரும் ஒருவராயிருக்கிறார்கள்.

யார் தேற்றரவாளன்? அவர் தேவனாகிய பரிசுத்த ஆவி. "உங்கள் சரீரமானது பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது" (1 கொரிந்தியர் 6:19) என்று வேதம் கூறுகிறது. பரிசுத்த ஆவி உங்களுக்கு ஈவாக கொடுக்கப்பட்டிருக்கிறார். உங்கள் சரீரம், தேவன் வாசம்பண்ணுகிற ஆலயமாயிருக்கிறது. இதைக் கேட்பதே எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! தேவன் நமக்குள் வாசம்பண்ணுகிறார். இதுவே, அவர் தரும் முதல் ஆறுதலாயிருக்கிறது. அவர் நமக்குள் வாசம்பண்ணும்போது என்ன செய்கிறார்? நமக்குள் வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் தமது அன்பை, பூரணமான அன்பை நமக்குள் ஊற்றுகிறார் (ரோமர் 5:5). ஆம், அவர் நமக்குள் அமர்ந்திருந்து, தமது அன்பினால் நம்மை அமர்ந்திருக்கப்பண்ணுகிறார். "அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்றும் வேதம் கூறுகிறது.

தாய் தன்னுடைய சிறுகுழந்தைக்கு என்ன செய்வாள்? தன்னுடைய குழந்தையின் மேலுள்ள அன்பினால் தாலாட்டு பாடுவாள். அவ்வண்ணமாக, ஆண்டவரும் நம்மேல் மகிழ்ந்து, நம்பேரில் கொண்டிருக்கும் பெரிதான அன்பினால் பாடுகிறார். ஆம், நம் ஆண்டவர், தாயைப்போல நம்மை தேற்றுகிறார். "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (ஏசாயா 66:13) என்றும், "சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்" (2 கொரிந்தியர் 1:3,4) என்றும் வேதம் கூறுகிறது.

இன்றும், ஆண்டவருடைய ஆறுதல் உங்களுக்குக் கிடைப்பதாக. உங்கள்பேரில் கொண்டிருக்கும் அன்பினால், அவர் அப்படிச் செய்கிறார். உபத்திரவத்தின் மத்தியில் எப்படி ஜெபிப்பது என்று தெரியாது என்று நாம் சொல்லும்போது, உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக ஜெபிப்பார். "ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்" (ரோமர் 8:26) என்று வேதம் கூறுகிறது. உங்கள்பேரில் அதிகமான அன்பு கொண்டு அவர் உங்களுக்காக ஜெபிக்கிறார். உங்கள் பெலவீனங்களில் அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். தேவனுக்குள் நாம் இந்த ஆறுதலை பெற்றிருக்கிறோம். இதை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன். உள்ளம் முழுவதும் துக்கத்தினால் நிறைந்து நான் ஆண்டவரிடம் ஜெபிக்க செல்வேன்; ஆனால், ஆண்டவர் என்னை தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பும்போது, ஜெபத்திற்கு பிறகு, துக்கத்திற்கு பதிலாக என் இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பும். என் இருதயத்தில் பெரிய இளைப்பாறுதல் உண்டாகும். தேவன் எனக்குள் தேற்றரவாளனாக இருப்பதை நான் உணர்வேன். நாம் தேவனிடம் ஜெபிக்கும்போது அப்படிப்பட்ட ஆறுதலை அவர் நமக்குத் தருகிறார். உபத்திரவம் வரும்போது, ஆறுதலை தேடி யாரிடமும் செல்லாதிருங்கள். தேவனிடம் செல்லுங்கள். அவர் உங்கள் பெலவீனத்தில் உங்களுக்கு உதவி செய்வார். ஒருமுறை நான் மிகவும் மனம் சோர்ந்துபோனபோது, "ஆண்டவரே, எப்படியாவது என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும்," என்று ஜெபித்துக்கொண்டிருந்தேன். ஆண்டவர், இனிமையான, அமர்ந்த சத்தத்தில், "என் பிள்ளையே, படுக்கச் செல். காலையில் எழுந்து உன் கணவனுடன் ஜெபி. நான் உன்னை என்னுடைய ஆவியினால் நிரப்புவேன்," என்று கூறினார். மறுநாள் காலை, தாம் சொன்னவிதமாகவே, ஆண்டவர் என்னையும் என் கணவரையும் தம்முடைய ஆவியினால் நிறைத்து, வெவ்வேறு பாஷைகளை அருளிச் செய்தார். நாங்கள் ஜெபித்தபோது, நான் இயேசுவை முகமுகமாய் பார்த்தேன். அவர் அன்பினால் நிறைந்திருநத்ர். ஒரு தாயின் அன்பை அவரது கண்களில் காண முடிந்தது. அவரைக் கண்டதும் மனச்சோர்வு என்னை விட்டு அகன்றது. நம்முடைய எல்லா உபத்திரவங்களிலும் நம்மை தேற்றும்படியாக தேவன் இன்னொரு தேற்றரவாளனை அனுப்பியுள்ளார். இன்றும், ஆண்டவர் தமது அன்பினாலும், ஆவியினாலும் உங்களை நிரப்புவாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால், உம்முடைய அன்பு என் இருதயத்திற்குள் பாய்ந்துசெல்லவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உபத்திரவத்தின் நேரத்தில் நீரே எனக்கு உதவி செய்கிறவராக, துயரத்தில் தேற்றுகிறவராக இருக்கிறீர். ஆண்டவரே, என்னுடைய வேதனைகள் எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்; என்னை குணப்படுத்தும்; உம்முடைய ஆறுதலின் பிரசன்னம் என்னை நிரப்பட்டும். நீர் மாத்திரமே எனக்கு போதுமாதலால், வேறு ஆறுதல் எனக்கு தேவையில்லை. ஆண்டவரே, என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றும். நீர் என்னை தேற்றி, மற்றவர்களை தேற்றும்படி என்னை எழும்பச் செய்து, என் இருதயத்தினுள் ஊற்றியுள்ளதுபோல், அவர்கள் இருதயங்களிலும் உம் அன்பை ஊற்றும். என் பாரங்களை அகற்றி, உம்முடைய ஆவியால் என்னை புதுப்பிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்போதும் என்னோடிருக்கிறீர் என்பதை அறிந்து, உம்முடைய சமாதானத்தில் இளைப்பாறி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.